நீண்டகால துடுப்பாட்ட வரலாற்றினைக் கொண்ட எமது மத்திய கல்லூரியில் சிறந்த ஒரு விளையாட்டு வீரராக செல்வன் விஜயகாந்த் வியாஸ்காந் அவர்கள் திகழ்கின்றார். இவர் 13 வயதுப் பிரிவில் இருந்தே எமது கல்லூரியில் விளையாடி வருகின்றார். அந்த வகையில் இவர் தன்னுடைய துடுப்பாட்ட விளையாட்டினை 2014 ஆம் ஆண்டு எமது கல்லூரியில் ஆரம்பித்தார்.
இவர் விளையாடிய காலப்பகுதியில் இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்ட
போட்டியில் எமது கல்லூரி கால் இறுதி வரை முன்னேறியது. அத்தோடு மாவட்ட
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் எமது கல்லூரி கால் இறுதி வரை முன்னேறியது.
இப்போட்டியில் எமது கல்லூரி 15 போட்டிகளில் பங்கு பற்றியது இப்போட்டியில்
வியாஸ்காந்த் அவர்கள் மொத்தமாக 150 ஓட்டங்களைப் பெற்று 10 இலக்குகளையும்
சரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு இவர் 15 வயதின் கீழ்
துடுப்பாட்ட அணியில் விளையாடியிருந்தார்.
இக்காலப்பகுதியில் இலங்கைப் பாடசாலைகள் 15வயதின் கீழ் துடுப்பாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் எமது கல்லூரி அணி அரையிறுதி வரை முன்னேறியதுடன் யாழ்மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் கால் இறுதி வரை முன்னேறியது. இப்போட்டியில் 26 போட்டிகளில் எமது கல்லூரி அணி விளையாடியிருந்தது.
இப்போட்டியில் வியாஸ்காந்த் அவர்கள் மொத்தமாக 300 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு 70 இலக்குகளையும் சரித்திருந்தார். இதே ஆண்டு இவர் மாவட்டஇ மாகாண 15 வயது அணியில் இடம் பிடித்து விளையாடியமை குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இவர் 17 வயதின் கீழ் துடுப்பாட்ட அணியில் விளையாடியிருந்தார்.
இக்காலப்பகுதியில் எமது அணி அகில இலங்கை துடுப்பாட்ட போட்டியில் கால் இறுதி வரை முன்னேறியது. அத்தோடு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டியில் எமது கல்லூரி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் எல்லாமாக 20 போட்டிகளில் எமது கல்லூரி பங்கு பற்றி இருந்தது.
இப்போட்டியில் வியாஸ்காந்த் அவர்கள் மொத்தமாக 250 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு 45 இலக்குகளை சரித்திருந்தார். தொடர்ந்து 2018ஆம்
ஆண்டு இவர் 17 வயதின் கீழ் துடுப்பாட்ட அணியில் விளையாடியிருந்தார்.
இக்காலப்பகுதியில் அகில இலங்கை துடுப்பாட்ட போட்டியில் எமது கல்லூரி கால் இறுதி வரை முன்னேறியது.
அத்தோடு யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் எமது கல்லூரி அணி முதலாம் இடத்தை பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டியில் எல்லாமாக 12 போட்டிகள் இடம் பெற்றிருந்தது. இதில் வியாஸ்காந்த் மொத்தமாக 250 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு 45 இலக்குகளை வீழ்த்தி இருந்தார் இதே ஆண்டு 19 வயதின் கீழ் துடுப்பாட்ட அணியிலும் இவர் விளையாடியிருந்தார். இக்காலப்பகுதியில் அகில இலங்கை போட்டிகளில் எமது கல்லூரி அணி காலிறுதி வரை முன்னேறியது. அத்தோடு யாழ்ப்பாண பாடசாலைகளுக்கிடையிலான 20/ 20 சுற்றுப்போட்டியில் எமது கல்லூரி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் வியாஸ்காந்த் 200 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு 30 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
இதே ஆண்டு மாகாண போட்டிகளில் எமது பாடசாலையை சேர்ந்த 5 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர் அவர்களில் வியாஸ்காந்தும் ஒருவர். இப்போட்டியில் வடமாகாண அணி சிறப்பானதொரு இடத்தினை பெற்றிருந்தது. இப்போட்டிகளில் விளையாடியமையை அடிப்படையாகக் கொண்டு செல்வன் வியாஸ்காந்த் அவர்கள் இலங்கை 19 வயதின் கீழ் அணிக்கு தெரிவாகி இந்தியா, அவுஸ்திரேலிய போட்டிகளில் விளையாடியிருந்தார்.
2019ஆம் ஆண்டு வியாஸ்காந்த் அவர்கள் 19 வயதில் அணியில் விளையாடிய
காலப்பகுதியில் எமது கல்லூரி அணி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான
துடுப்பாட்ட போட்டியில் கால் இறுதிவரை முன்னேறியது. இதே ஆண்டு
ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட
20/20 சுற்றுப்போட்டியில் எமது கல்லூரி அணி இறுதிப்போட்டியில் பரியோவான்
கல்லூரியை எதிர்கொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது இப் போட்டிகளில் வியாஸ்காந்த் அவர்கள் மொத்தமாக 300 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு 45 இலக்குகளை வீழ்த்தி இருந்தார். இதே ஆண்டு இவர் 19 வயது மாகாண மாவட்ட அணைகளில் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 113வது ‘வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் போட்டியில் விளையாடிய வியாஸ்காந்த் அவர்கள் இப்போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றிருந்தார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 114வது வடக்கின் பெரும்போரpல் கல்லூரியின் அணித்தலைவராக திகழ்ந்தார்.
இக்காலப்பகுதியில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியான போட்டியில் நமது கல்லூரி அணி காலிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிப்போட்டி நடைபெறவில்லை. அத்தோடு இக்காலப் பகுதியில் நடைபெற்ற யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் 20/20 சுற்றுப்போட்டியில் நமது கல்லூரி அணி முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
இப்போட்டியில் 7 போட்டிகளில் நமது கல்லூரி அணி கலந்து கொண்டிருந்தது இப்போட்டியில் வியாஸ்காந்த் அவர்கள் மொத்தமாக 200 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு 15 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். அத்தோடு 2020ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற சர்வதேச தரத்திலான இலங்கை பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் Jaffna Stallions அணி சார்பில் ரியாஸ்கான் அவர்கள் விளையாடி இருந்தமை எமது கல்லூரிக்கும் வட மாகாணத்திற்கும் ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் பெருமையைத் தேடித்தரும் ஒரு விடயமாகும். சுற்றுப்போட்டியில் இவர் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தார். இதில் மொத்தமாக 12 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு ஒரு இலக்கையும் வீழ்த்தியிருந்தார்.