அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர 2022 பரீட்சைப் பெறுபேற்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர் பெறுபேற்றைப் பெற்றுப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு 2023.09.12 காலை கல்லூரி மைதானத்தில் காலைப் பிரார்த்தனையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்த கொ.சஞ்சய்(3A), வி.அனோஜன்(3A), சி.முகமட் சஹ்ரான்(2AB), சி.நிரூஜன்(2AB), ச.முகமட் ஆசிக்(A2B), யூ.நிகேஷ; பெல்சியன்(ABC), ஞா.கனிஸ்ரன்(3B) ஆகிய மாணவர்கள் வணிகத்துறையிலும் ரா.கிருபாகரன்(2AB), அ.கனிஸ்ரன்(2AB), சி.தமிழழகன்(B2C) ஆகிய மாணவர்கள் பொறியியல் தொழினுட்பத்துறையிலும் ந.கபீசன்(யA2B) கணிதத்துறையிலுமாக பதினொரு மாணவர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி அதிபர் திரு. சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், பிரதி உபஅதிபர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு மாலையணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கிக் கௌரவித்தார்கள்.
கௌரவிப்பை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பில் வர்த்தகப்பிரிவில் 3A சித்தியைப் பெற்றுக்கொண்ட மாணவன் கொ. சஞ்சய் ஏற்புரை வழங்கினார். தாம் பாடசாலையில் நடைபெற்ற இணைபாடவிதானச் செயற்பாடுகள் பலவற்றிலும் பங்குகொண்டபோதும் பரீட்சையை அண்மித்த ஆறுமாத காலம் கடுமையான முயற்சி செய்து கற்றதன் பயனை தான் இப்போது பெற்று மகிழ்வதாகத் தெரிவித்தார். அத்தோடு கணக்கியலில் தான் மிகவும் குறைவான புள்ளிகளையே பெற்று வந்ததாகவும் ஆசிரியர்கள் தன்னைத் தனிப்பட கவனித்து கற்பித்து தான் உயர்நிலைபெற துணையாக விளங்கினார்கள் எனவும் கூறி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
சென்ற வருடத்தை விட இம்முறை வர்த்தகத்துறையில் அதிக மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்காக உழைத்த ஆசிரியர்களுக்கு கல்லூரி அதிபர் நன்றிகளைத் தெரிவித்தார்.