யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர்கள் மனதில் மட்டுமன்றி பெற்றோர், ஆசிரியர் மனங்களிலும் மதிப்புக்கும் புகழுக்கும் உரியவராக விளங்கும் செல்வி கயிலாசப்பிள்ளை கலாதேவியவர்கள் முப்பத்தைந்து வருடகால ஆசிரியச் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதை முன்னிட்டு கல்லூரியின் ஆசிரிய வட்டத்தால் மணிவிழா முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வானது 2023.05.11 அன்று வியாழக்கிழமை தந்தை செல்வா அரங்கிலே மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆசிரிய வட்டத் தலைவரின் தலைமையுரையினைத் தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களாலும் ஆசிரிய வட்டத்தினராலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்புச் செய்யப்பட்டார். கல்லூரியின் பிரதியதிபர் திருமதி கி.க.செல்வகுணாலன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். ஆசிரியரின் சேவை நலனை நினைவுகூர்ந்து வாழ்த்துரையினை வழங்கினார். நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவன் ச.வருண்சர்மாவின் பேச்சு இடம்பெற்றது. எமது கல்லூரி உபஅதிபராகக் கடமையாற்றி தற்போது யாழ் இந்துக் கல்லூரி உப அதிபராகக் கடமையாற்றும் திரு.நா.விமலநாதன் அவர்களின் இனிய வாழ்த்துப் பாமாலை ஒலித்தது. திருகோணமலை சண்முகாநந்தா மகளிர் கல்லுரி, திருகோணமலை மக்கள் சார்பில் திருமலைப் பிரணவனின் வாழ்த்துரையும் தொடர்ந்து யாழ் மத்திய கல்லூரிமுதல்வர் திரு சி.இந்திரகுமார் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
நிகழ்வின் நிறைவாக மணிவிழா நாயகியும் பல ஆசிரிய விருதுகளை வென்ற ஆசிரியர் கயிலாசப்பிள்ளை கலாதேவி அவர்கள் ஏற்புரை இடம் பெற்றது. தன் மனதில் நின்ற மாணவர்கள் பற்றிய பகிர்வும் நினைவுகளும் பகிரப்பட்டன. ஆசிரிய வட்டச் செயலாளர் திரு சி.மணிமாறனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.