யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை தமிழ்க் கல்வியலாளரும் விளையாட்டு வீரரும் சமூக சேவையாளருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் தமது 89 வது வயதில் ஏப்ரல் 18 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோனியா நகரில் காலமானார். அன்னாரின் இழப்பால் துயரடைந்த கல்லூரிச் சமூகம் 25.04.2024 அன்று அன்னாருக்கான அஞ்சலி நிழ்வான ஏற்பாடு செய்து நிகழ்த்தியது.
நிகழ்வில் அமரர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர். அஞ்சலி நிகழ்வை கல்லூரியின் மாணவ முதல்வர் சபை பொறுப்பேற்று நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தலைமையுரை, நினைவுரைகளை வழங்கிய மாணவ தலைவர்கள் அன்னாரின் விளையாட்டு செயற்பாடுகளையும் சமூக செயற்பாடுகளையும் நினைவு கூர்ந்தனர்.
எதிர் வீரசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்த போதே பல சாதனைகளை முறியடித்தார். இவர்கள் சகோதரர்கள் கூட சிறந்த விளையாட்டு வீரர்களாகவே திகழ்ந்தனர்.
இலங்கையின் முன்னனி உயரம்பாய்தல் வீரராகவும் சாதனையாளராகவும் திகழ்ந்த இவர் அனைத்துலகப் போட்டியில் களப் போட்டியொன்றில் இலங்கைக்கு முதன் முதலாக தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.1958 இல் ஜப்பானில் தோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரப்பாய்தலில் புதிய சாதனையை நிறுவியதோடு தங்கப் பதக்கத்தையும் பெற்றவராவார்.
1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலும்பிக் போட்டிகளிலும், மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிவராவார்.
அஞசலி நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக யாழ்;பாணப் பல்கலைக் கழகத்தின் உடற்கல்விப் பிரிவு பணிப்பாளர் திருவாளர் கணேசநாதன் அவர்கள் வருகை தந்திருந்தார். அவரின் தன்னார்வ பணிகளை மிக விரிவாக நிகழ்த்தி அன்னாருக்கு அஞ்சலியை நிகழ்த்தினார். எதிர் வீரசிங்கம் அவர்கள் 1994 முதல் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகள் பல தன்னார்வப் பணிகளை முன்னெடுத்துவந்தார். 1998, 1999 காலப் பகுதியில் வடக்குகிழக்கு மாகாண சபையும் பின்னர் 2010 இல் வட மாகாணசபையிலும் ஆலோசகராகப் பணியாற்றி, பல விளையாட்டுப் பயிற்சி வகுப்புகளை நட்த்தினார். 2012 இல் SERVE e-earning Institute ஐ யாழ்ப்பாணத்தில் தொடங்கி 2017 வரை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. பல உலகப் பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனஸ்கோவிலும் ஐந்து வருடங்களை பணியாற்றினார். அமைதிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்த இவர் கல்வி, விளையாட்டு ஆகிய இரு துறைகளிலும் தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்காக உதவ முனைந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாகத்தில் இணைந்து விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். விளையாட்டு வீரர்களக்கு தன்னாலான சகல உதவிகளையும் வழங்கி சேவை செய்தார். அன்னாரின் பணிகள் அளவிட முடியாதவை. தமிழ் இனத்துக்கே பெருமை சேர்த்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போமாக.