மத்திய கல்லூரி பல மேதமை பொருந்திய தலைமைத்துவம் கொண்ட ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த தேசிய கல்லூரி ஆகும். இவ் தலைமைத்துவ ஆளுமைகளில் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் வகிபாகத்தில் தன்னை உள்ளுறுத்தி அர்ப்பணிப்புடன் பணிசெய்த எம்முடைய பிரதி அதிபர் திரு. இ.திரவியநாதன் என்றும் பாராட்டுக்குரியவர் யாழ்ப்பாணத்தின் பெருமை பொருந்திய தீவகப்பரப்பில் குறிப்பாக நயினாதீவில் பிறந்து அங்கேயே ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் முடித்துக்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தினையும், தன்னுடைய முதுகலைமாணி பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேர்ந்த இவர் கல்விப் புலத்தில் அதிலும் கற்பித்தலில் 1989 இல் தடம் பதித்தார். தீவகத்தின் பல பாடசாலைகளில் ஆசிரியராக பணிபுரிந்தாலும் யாழ்/ நயினாதீவு ஸ்ரீ கணேசன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் உப அதிபராக தலைமைத்துவ வகிபாகத்தில் தன்னை அடையாளப்படுத்தியதை தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும் பகுதி தலைவராகவும் திறம்பட சேவையாற்றி இறுதியாக கடந்த ஆறு வருடங்கள் யாழ் மத்திய கல்லூரியில் எம்முடன் இணைந்து உப அதிபராகவும் பிரதி அதிபராகவும் திறம்பட தன்னுடைய பணியை முடித்துள்ளார்..இவரிடம் எதையுமே சிரித்த முகத்துடன் கையாளும் பக்குவம் மிகையாக உள்ளது. வேலைப்பழு கூடிய நேரத்திலும் கூட முகமலர்ச்சியுடன் வேலை செய்யும் திறன் படைத்தவர். என்னுடைய சிறந்த நண்பர்களில் அவரும் ஒருவர். ஓய்வுபெறும் இத்தருணத்திலும் தன்னை வயது முதிர்ந்தவராகவோ அல்லது ஓய்வு வேண்டும் என்ற மனநிலையை உடையவராக அல்லாமல் தன்னுடைய பணியை உற்சாகமாக செய்து முடித்தார். அவர் ஓய்வு காலங்களிலும் மகிழ்ச்சிக்குரிய இயலுமைகளுடன் தேக ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் அனைத்து செல்வங்களாலும் திருப்தியைப்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதோடு அவருடைய இத்தனை நாள் சேவையை மனதார பாராட்டுகின்றேன்.
கல்லூரி முதல்வர்
கலாநிதி S. K . எழில்வேந்தன்